கொழும்பு பெய்ரா ஏரியைப் புனரமைப்பதற்கு ஆதரவளிக்கும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பின் இலங்கைக் கிளையான A-PAD SL, தனது தூய நீர்வழிகள் முன்முயற்சித் திட்டத்தின் முதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி, ஸ்ரீ உத்தரானந்த மாவத்தை படகுத்துறையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தன்னார்வலர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்காளி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெய்ரா ஏரி புனரமைப்புப் பணிக்குழுவின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, HSBC ஸ்ரீலங்கா மற்றும் Clean Ocean Force Sri Lanka ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
ஏரியைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் மாசுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கழிவுகள் குவிந்துள்ள மற்றும் மாசடைந்த பகுதிகளை அடையாளம் காணும் வரைபடமிடல் நடவடிக்கையிலும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
ஸ்ரீ ஜினரதன தொழிற்பயிற்சி நிலையம், ஆடை வடிவமைப்பு கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நடவடிக்கையில் பங்கேற்றனர்.
இதன்போது, ஏரியின் கரையோரங்கள் மற்றும் அதைச் சூழவுள்ள நடைபாதைகளில் கழிவுகள் குவிந்துள்ள இடங்களைத் தன்னார்வலர்கள் அடையாளம் கண்டனர். அத்துடன், பாசிப் படர்வு, துர்நாற்றம், நீர் உட்புகும் வழிகள், கழிவுகளைத் தடுக்கும் தடுப்புகள் மற்றும் அபிவிருத்தி செய்யக்கூடிய பகுதிகள் தொடர்பான அவதானிப்புகளையும் பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் கங்காராமய விகாரை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை கடற்படை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கல்வி நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில், A-PAD SL இன் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரும் ஏரியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தூய நீர்வழிகள் திட்டத்தின் ஊடாக பெய்ரா ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதுடன், அதனை முக்கிய போக்குவரத்து மற்றும் பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக A-PAD SL தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ஏரியைச் சூழவுள்ள சமூகங்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடையே பொறுப்பான கழிவகற்றல் நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியனவும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.







