கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் தொற்று மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் கடந்த மாத முற்பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் நேற்று (22) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வைரஸ் மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பல தசாப்தங்களாகப் பரவி வந்தாலும், ஷமோண்டா வைரஸ் இதற்கு முன்னர் மனிதர்களிடம் கண்டறியப்பட்டதில்லை” என பிரான்ஸ் சுகாதார மற்றும் விவசாய அமைச்சுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
எனினும், தற்போது பொதுமக்களுக்கு எந்தவிதமான சுகாதார அச்சுறுத்தலும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நோயெதிர்ப்புச் சக்தி கடுமையாகக் குறைந்திருந்த ஒருவரைப் பாதித்த விதிவிலக்கான சம்பவமாகவே இது கருதப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
“தற்போதைய தகவல்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய பிற வைரஸ்களின் பரவல் குறித்த அறிவின் அடிப்படையில், இது ஒரு தனிப்பட்ட மனிதத் தொற்றுச் சம்பவமாகும். தற்போதைய நிலையில், இந்த வைரஸ் பரவலாகப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன” என உலக சுகாதார அமைப்பு ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஷமோண்டா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
1960களின் நடுப்பகுதியில் நைஜீரியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஷமோண்டா வைரஸ், பூச்சிகள் மூலம் பரவக்கூடிய ஓர்த்தோபன்யாவைரஸ் (Orthobunyavirus) வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த வைரஸ் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் பல்வேறு விலங்குகளைப் பாதிக்கக்கூடியவை. ஷமோண்டா வைரஸ் முக்கியமாகக் கால்நடைகளை, குறிப்பாக மாடுகளைப் பாதிக்கிறது.
இது ‘குலிகொய்ட்ஸ்’ (Culicoides) எனப்படும் கடிக்கும் சிறிய ஈக்கள் மூலம் பரவுகிறது.
பல ஆண்டுகளாக ஆபிரிக்கா மற்றும் ஜப்பானில் விலங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு வந்துள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியது எனக் கருதப்படவில்லை.
பிரான்ஸ் விவசாய அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு பிரான்ஸில் குலிகொய்ட்ஸ் ஈக்கள் கடித்ததன் மூலம் குறித்த நபருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கருதப்படுகிறது.
குறித்த பகுதியில் 2026ஆம் ஆண்டின் வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் விலங்குகளிடையே இந்த வைரஸ் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரியல், மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர்கள் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய்த்தடுப்பு மையத்தின் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.







