14ஆவது பாப்பரசர் லியோவுக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் புற்றுநோய் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருந்த நிலையில், ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் இன்று (14) இந்தச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
71 வயதான பாப்பரசருக்கு 90 நிமிடங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற இந்தச் சத்திரசிகிச்சையின் பின்னர், அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (Lung Adenocarcinoma) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சையின்போது எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை எனவும், சிகிச்சைக்குப் பின்னர் பாப்பரசர் இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன், குறுகிய நேரக் கண்காணிப்புக்குப் பின்னர் தனது அறைக்குத் திரும்பியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழமையான மருத்துவப் பரிசோதனைகளின்போதே அவரது நுரையீரலில் காணப்பட்ட கட்டி முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்பரசர் சுமார் ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பாப்பரசரின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காகவும், அவருக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் வைத்தியசாலைக்கு வெளியே பெருந்திரளான மக்கள் பல மணி நேரம் காத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








