பாடசாலையின் இலச்சினையைப் (Logo) பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கான அதிகாரம், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2026/10 இலக்க சுற்றறிக்கையின் ஊடாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செயல்பாட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளில் நடைபெறும் ‘பிக் மேட்ச்’ (Big Match) எனப்படும் பெரும் கிரிக்கெட் போட்டிகளின்போது மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாவதாக பெற்றோர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, பாடசாலையின் இலச்சினையைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் எனவும், அவ்வாறான நிகழ்வுகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தத் தீர்மானத்தை கடுமையாகக் கண்காணிப்பதற்கும், விதிமுறைகளை மீறும் நிகழ்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026/10 இலக்க சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது பாடசாலையின் இலச்சினையைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிகழ்வுகளில் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த நிகழ்வைத் தடை செய்யும் அதிகாரமும் கல்விச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.









