தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த மேலும் மூவர் இன்று (05) பிற்பகல் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மணல்திட்டில் இருந்து கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில் தந்தை ஒருவரும், 11 மற்றும் 13 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே, மணல்திட்டில் சிக்கித் தவித்த நிலையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 11 பேரில் ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குகின்றனர்.மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.









