இலங்கை தனது முதல் தொகுதி புதிய அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல்லொன்றை எட்டியுள்ளதுடன், புதிய வெளிநாட்டு சந்தையொன்றுக்கான வாய்ப்பும் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் புதிய அன்னாசிப் பழங்களின் முதலாவது 20 அடி கொள்கலன் இன்று (21) ஏற்றுமதிக்காக தயார்படுத்தப்பட்டது. இந்த ஏற்றுமதியை C R Exports (Pvt) Ltd நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தேசிய தாவரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு (NPPOs) இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில், புதிய அன்னாசிப் பழங்களை பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான தேவையான தாவரச் சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB), பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், வர்த்தகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவை ஆகியன இந்த ஏற்றுமதியை சாத்தியப்படுத்துவதில் பங்களித்துள்ளன.
சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கை அன்னாசிப் பழங்களுக்கு அதிக வாய்ப்புள்ள சந்தையாக கருதப்படுகிறது. அந்நாடு ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 5,000 மெட்ரிக் தொன் அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்வதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தற்போது பாகிஸ்தான் சந்தைக்கு அன்னாசிப் பழங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உள்ளன. இலங்கை அன்னாசிப் பழங்களின் தரம், புத்துணர்ச்சி மற்றும் தனித்துவமான சுவை, அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் ஆகிய காரணிகளால் பாகிஸ்தான் சந்தையில் இலங்கைக்கு அதிக பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி அனுமதி நடைமுறையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் தேசிய தாவரப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்த பூச்சியியல் ஆய்வாளர் மொஹமட் அகீட் இலங்கைக்கு விஜயம் செய்து, தெரிவுசெய்யப்பட்ட அன்னாசிப் பயிர்ச்செய்கைத் தளங்கள் மற்றும் பொதியிடும் நிலையங்களை ஆய்வு செய்திருந்தார்.
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டைத் தொடர்ந்து, தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவையினால் தாவரச் சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்கப்படும் நிபந்தனையின் கீழ், இலங்கையிலிருந்து புதிய அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து அன்னாசிப் பழங்களும் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) சான்றிதழ் பெற்ற பண்ணைகளிலிருந்து பெறப்பட வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டில் அன்னாசிப் பழப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் இலங்கை சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கும் விவசாய ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கும் பாகிஸ்தான் போன்ற புதிய சந்தைகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வது முக்கியமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவகாடோ மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய விவசாயப் பொருட்களையும் பாகிஸ்தான் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த புதிய ஏற்றுமதி வாய்ப்பு, பாகிஸ்தான்–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (PSFTA) மூலம் கிடைக்கும் நன்மைகளை அதிகரிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









