பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தாராசிந்தா பகுதியில் உள்ள அமன் மேலா அருகே சனிக்கிழமை வீதியோர பொலிஸ் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் சோதனைச் சாவடியில் மோதச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பொலிஸ் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் குறைந்தது இரு பொதுமக்களும் உள்ளடங்குகின்றனர்.
தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னணியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Al Jazeera)








