பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, எல்பிட்டிய வலய குற்ற விசாரணைப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, குற்றச் செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பத்தேகம – பேதுருவத்த சந்தி மற்றும் ஹல்பாதோட்ட பகுதிகளில் வைத்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 16 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், கஹவத்த, பல்லேபெத்த மற்றும் ஹிக்கடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






