நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், நேபாளம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியும் இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்தில் இன்று (03.09.2026) சர்வமத விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையில் உள்ள பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கௌரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், கௌரவ சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, பேராயர் கலாநிதி பிரின்ஸ் ஜே. ஞானராஜா பாதிரியார், கலாநிதி திலகசூரிய ஜயவர்தன பாதிரியார் மற்றும் கலாநிதி அன்ரோனி சுவாமி ஆகியோர் நேபாள தூதரகத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, இலங்கைக்கான நேபாள தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d’Affaires a.i.) விஜய் குமார் ரவ்த் அவர்களை சந்தித்த சர்வமதத் தலைவர்கள், நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நான்கு மதங்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், நேபாளம் பேரழிவிலிருந்து விரைவாக மீண்டு வரவும் சர்வமதத் தலைவர்களால் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ந்து, நேபாள தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த அனுதாபப் புத்தகத்தில் சர்வமதத் தலைவர்கள் தமது மதங்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபச் செய்திகளைப் பதிவு செய்தனர்.இந்நிகழ்வில் நேபாள தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.













