நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நேற்று (18) மாலை பெய்த கடும் மழையினால் நானுஓயா – ரதல்ல பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியிலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பல மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நானுஓயா – கெல்சி பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ள ஆலயம், வீதிகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக, தோட்டத் தொழிலாளர்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.








