இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய பிரதி மேயராக சட்டதரணி பஸீர் மொஹமட் நேற்று 6ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நீர்கொழும்பு பிராந்திய ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான சுகத் திலகரத்ன, மேயர் துலிப் சாமர பிரனாந்து ஆகியோர் முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து பிரதி மேயர் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
பிரதி மேயராக பதவி வகித்தவர் மேயராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பிரதி முதல்வர் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் மூன்றாவது முஸ்லிம் பிரதி மேயரான இவர் போரத்தொட்ட கிராமத்தில் இருந்து தெரிவது செய்யப்பட்ட இரண்டாவது முஸ்லிம் பிரதி மேயராவர்.
தலுவகொட்டுவ புனித ஆனா கல்லூரி மற்றும் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான தோழர் பஸீர் தமது உயர் கல்வியை முடித்த பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் இதழியல் பீடத்தில் சேர்ந்து, கலை இளங்கலை (ஊடகம்) சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்த சட்டதரணியானார். அக்காலகட்டத்தில் கலைத்துறை உட்பட பல்வேறு போட்டிகளில் விருதுகளை வென்ற ஒரு புகழ்பெற்ற இவர் சிங்கள சட்ட மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நீர்கொழும்பு செத் எஃப்எம் வானொலி, ஸ்ரீ டிவி ஆகியவற்றின் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சுயாதீன தொலைக்காட்சியிலும் லக்ஹட வானொலியிலும் பல ஆண்டுகளாகப் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.
மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முழுநேர உறுப்பினருமான பஸீர் உச்ச நீதிமன்ற சட்டத்தரணி ஆவார்.
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் போரத்தொட்ட வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீர்கொழும்பு மாநகர சபை சொத்து மீதான நிலையியற் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் தேசிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி செயற்குழு உறுப்பினராகவும், தேசிய அறிஞர்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் நீர்கொழும்பு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.









