இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா நிலக்கரி தனியார் நிறுவனம் (Lanka Coal Company (Pvt) Ltd) அல்லது அதன் வழிவந்தவர்களினால் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையிலும் மின் உற்பத்தியின் போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, 1978 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிகான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பொறுப்புகள் பின்வருமாறு:
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் (Procurement) செயல்முறையில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறிதல் மற்றும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என மதிப்பிடுதல்.
குறித்த காலப்பகுதியில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும், கொள்முதல், விநியோகம், தரப் பரிசோதனை, செயற்பாடு மற்றும் பயன்பாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறைகளையும் விசாரணைக்கு உட்படுத்துதல்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, மின் உற்பத்தி மட்டம் எதிர்பார்த்த வினைத்திறனுடன் (Efficiency) இடம்பெற்றுள்ளதா என ஆராய்தல்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பின், அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் செயல்முறையில் சட்டரீதியான மற்றும் நிதி ரீதியான முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்தல்.
இந்த செயல்முறையின் போது ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதா என்பதையும், அவ்வாறு மீறப்பட்டிருப்பின் அதற்கு எதிராக கொடுப்பனவுகளை நிறுத்துதல் அல்லது ஏனைய நட்டஈட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனவா என ஆராய்தல்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் இடம்பெற்றிருப்பின், அதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரத்தினர், அரச அதிகாரிகள், லங்கா நிலக்கரி தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைத்தல்.
இவ்வாறான முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்து, முறையான நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.
மேற்கூறிய விடயங்களுக்கு மேலதிகமாக, நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பாக பதிவாகக்கூடிய ஏனைய முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அத்தகைய நிலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து பரிந்துரைத்தல் ஆகும்.










