நிதிப் பற்றாக்குறை காரணமாக, பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வழங்கப்படும் உணவு உதவிகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மாதாந்த உணவு உதவிகளைப் பெற்று வந்த 5 இலட்சம் பேர் அந்த உதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, காஸாவின் தற்போதைய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரான சுமார் 14 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த உணவு உதவிகளைப் பெறும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையை 16 இலட்சத்திலிருந்து 11 இலட்சமாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உணவுப் பங்கீடுகள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், 75,000 குடும்பங்களுக்கான பண உதவிகளும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், நாளாந்தம் வழங்கப்படும் சமைத்த உணவுகளின் எண்ணிக்கையும் 250,000 இலிருந்து 150,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள் நான்காவது குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காஸா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலுள்ள மேற்குக் கரையில் அத்தியாவசிய மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அடுத்த ஆறு மாதங்களில் அவசரமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.








