இலங்கையில் இன்று (17) காலை ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடை, இரவு 9.56 மணியளவில் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் (National System Operator) அறிவித்துள்ளது.
மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இன்று காலை 11.45 மணியளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.
இம்மின்தடைக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சந்தேகிக்கப்பட்ட போதிலும், மின்விநியோகத் தடைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்தடையால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக, எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தன.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களான அம்பத்தலை மற்றும் பியகம ஆகியவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.
மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக சமனலவெவ மற்றும் புதிய லக்ஷபான மின் நிலையங்களைத் தவிர, நுரைச்சோலை உள்ளிட்ட ஏனைய மின் நிலையங்கள் செயலிழந்ததாக வலுசக்தி அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், நுரைச்சோலை மின் நிலையம் உரிய நடைமுறைகளுக்கு அமையப் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், ஏனைய மின் நிலையங்கள் செயலிழந்ததாகப் பரவிய தகவல்கள் தவறானவை எனவும் தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் பின்னர் தெளிவுபடுத்தியது.
மின்விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில், கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல அமைப்புகளைத் தற்காலிகமாகத் துண்டிக்குமாறு அவற்றின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை மாவட்டங்களில் மின்விநியோகம் படிப்படியாக மீள ஆரம்பிக்கப்பட்டது. மாலை 5.30 மணியளவில் தேசிய மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், மின்விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதற்கு இரவு வரை காலதாமதமானது. மின்னேரிய, மெதிரிகிரிய, பண்டாரகம உள்ளிட்ட சில பகுதிகளில் இரவு 9 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








