நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற “நச்சற்ற பழங்கள் பிள்ளைகளுக்கு” என்ற தேசிய வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் பணிகள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பழங்களைப் பழுக்க வைத்தல், இரசாயனப் பயன்பாடின்றி பண்ணைகளிலிருந்து பழங்களை அறுவடை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு பாதுகாப்பான முறையில் விநியோகித்தல் தொடர்பாக வர்த்தகர்களுடன் கலந்துரையாடி, அவர்களை இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள பழக்கடைகளை வரைபடமாக்கி, QR குறியீட்டின் மூலம் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் அடையாளம் காணக்கூடிய புதிய முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.







