தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் தனது நேரம், உழைப்பு மற்றும் பணம் வீணடிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக உயர்கல்வி டிப்ளோமா மாணவர் ஒருவர் ரூ.50 இலட்சம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
லங்காதீப செய்தியின்படி, சனத் குமார அத்துகோரள என்ற மாணவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
நுகேகொட மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்ஷ, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 7 உயரதிகாரிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எவ்வித மறுதேர்வும் எழுதாமல் பின்னர் எவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான விளக்கத்தை நீதிமன்றத்தில் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துகோரள, கொழும்பு பல்கலைக்கழகத்தின் Advanced Diploma in Entrepreneurship and Small Business Management பாடநெறியில் கல்வி பயின்று வருகிறார்.
அவர், ‘Operations Management for Small Business’ (508) மற்றும் ‘Business Strategy and Sustainability’ (510) ஆகிய பாடங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு விரிவுரையாளர் தன்னிடம் ரூ.80,000 கோரியதாகவும், அதனை வழங்க மறுத்த பின்னர் தனக்கு எதிராக விரோதப் போக்கு காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், தேர்வுக் கேள்விகள் ஏனைய மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2025 ஜனவரியில் தான் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ததாகவும், 2025 ஏப்ரலில் எவ்வித மறுதேர்வும் இன்றி சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 510ஆம் பாடத்திற்கான குழுத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.3,500 வசூலிக்கப்பட்ட போதிலும், திட்டத்தில் பங்கேற்காத மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்த போதிலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பின்னர் எவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கத்தை வழங்கவில்லை எனவும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்த வழக்கு செப்டெம்பர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.








