டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சமூகப் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை 21.08.2026 முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலுவூட்டலுக்காக மாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்பாடல் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டம், கொழும்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.
டெங்கு ஒழிப்புத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
அதற்காக ஒரு புதிய பாணித் திட்டமாக நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது.
இந்தச் சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழா நாளை காலை 9.00 மணிக்கு பொரலஸ்கமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர உள்ளிட்ட சுகாதாரத் துறையின் அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
டெங்கு ஒழிப்புக்கான அரசாங்கத்தின் திட்டங்களுடன் மக்களின் செயலுக்கமான பங்களிப்பு அத்தியாவசியம் என்பதால், இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் சமூகத்தை டெங்கு ஒழிப்புச் செயல்பாட்டில் மிகவும் தீவிரமாக ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.









