தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (10) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்து, அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்ட முன்மொழிவு தொடர்பில் அறிமுகம் செய்வதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
இதன்போது, நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிராகப் பதிவாகும் வன்முறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தரவுகளை அதிகார சபையின் பிரதிநிதிகள் முன்வைத்தனர். இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இஸ்லாத்தில் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சிறப்புகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் அல்-குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.
மேலும், ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு தொடர்பிலும் அறிமுகம் வழங்கிய அவர், சிறுவர்கள் மற்றும் மகளிர் தொடர்பான மேலதிக இஸ்லாமிய தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள ஜம்இய்யாவை அணுக முடியும் எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் ப்ரீதி இநோகா ரணசிங்க, சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சட்டத்தரணி பிரீத்திகா சகலசூரிய மற்றும் சைபர் பிரிவு உத்தியோகத்தர் மிப்ராஜ் அஹமத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர், பொருளாளர், உப தலைவர், உப பொதுச் செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் உள்ளிட்ட ஆளணியினரும் கலந்துகொண்டனர்.









