இலங்கையில் இடம்பெறும் சாலை விபத்துகளில் சுமார் 30 வீதமானவை நாய்களால் ஏற்படுவதாக, உளவியல் முறைகள் மூலம் விலங்குகளைப் பிடிக்கும் முகாமைத்துவத்துக்கான கால்நடை மருத்துவ சங்கத்தின் ஸ்தாபகர் மருத்துவர் சாமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாய்க்கடி சம்பவங்களுக்கான ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத குப்பைகள் காரணமாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டமொன்றின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அவற்றுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகளுக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கும் என மருத்துவர் சாமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விலங்கு நலனையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் இந்த முன்மொழிவு சிறந்த அணுகுமுறையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








