குவைத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில், இலங்கைப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காகக் குவைத்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) அதிகாலை 2.52 மணியளவில் குவைத் நகரிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட ஜசீரா விமானச் சேவைக்குச் சொந்தமான J9-551 என்ற விமானத்தில் பயணித்தபோதே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் விமானப் பயணங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் விமானச் சேவை விதிமுறைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், குறித்த பெண் தனது கர்ப்பிணி நிலையை விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் பயணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் பணிக்குழுவினரின் உதவியுடன் விமானத்தினுள்ளேயே எவ்வித சிக்கல்களுமின்றிப் பிரசவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விமானி உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே அவசர அம்புலன்ஸ் வண்டி, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, தாயும் சேயும் மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








