அக்குறணை பகுதியில் இன்று (19) இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிமெந்து தூள் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொட பொலிஸாரால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி – மாத்தளை ஏ9 வீதியில், அக்குறணை ஏழாவது மைல்கல் அருகிலுள்ள குருகொட சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சிமெந்து தூள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த பல வாகனங்களுடன் மோதிய பின்னர் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








