கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் இடையில் இன்று (17) நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தையில் தொடர்புகொண்டு, கிராம உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தாம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.









