திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” இன் மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 3ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவம்:
https://forms.gle/
அத்துடன், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது.









