ஆரோக்கியமாக இருந்தாலே மாணவர்களால் சிறப்பாகக் கற்க முடியும் என்றும், மூளை சீராக இயங்கினாலே நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், சாய்ந்தமருது அல்கமறூன் வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான டாக்டர் சகீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.
எனவே, மாணவர்கள் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
சாய்ந்தமருது அல்கமறூன் வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி, நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மாணவர்கள் முதலில் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இலகுவாகக் கிடைக்கிறது என்பதற்காக கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்காமல், வீடுகளில் தயாரிக்கப்படும் சத்தான உணவுகளை வழங்கி பாடசாலைக்கு அனுப்புமாறு பெற்றோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், டெங்கு நோய் பரவுவதற்கான முக்கிய இடங்களாக தற்போது வீடுகளின் மேற்புறங்களில் காணப்படும் தண்ணீர்த் தொட்டிகள், குழாய்க்கிணறுகள் உள்ளிட்ட இடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பெற்றோர் தங்களது வீடுகளில் இவ்வாறான இடங்களை அடிக்கடி பரிசோதித்து, தேங்கி நிற்கும் தேவையற்ற நீரை அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் பெற்றோருக்கு அறிவுறுத்துமாறும் மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாணவர்கள் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், சரியான தொடுகை மற்றும் தவறான தொடுகை தொடர்பிலும் அவர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
யாரேனும் தவறான முறையில் அணுகினாலோ அல்லது தொட முயன்றாலோ பயப்படாமல் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பாடசாலைக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக வருகை தந்த மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
நிகழ்வில் ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுறு பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.












