

சில்மியா யூசுப்
கொழும்பு: வியட்நாம் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டிரின் தி டாம் (Trinh Thi Tam) மற்றும் Vietravel நிறுவனத்தின் தலைவர் நுயென் குவொக் கி (Nguyen Quoc Ky) ஆகியோர் இணைந்து, “Viet Nam – The World of Endless Wonders” என்ற கருப்பொருளில், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள இலங்கை–வியட்நாம் நேரடி விமான சேவையை அறிவிக்கும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்வை ஜூலை 30ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படுவது இரு நாடுகளுக்குமிடையே நட்புப் பாலத்தை அமைக்கும் முக்கியமான முயற்சியாகும் எனக் குறிப்பிட்டார். இந்த சேவை இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பிரதிச் சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், Colombo Times-க்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த புதிய விமான இணைப்பு இரு அழகிய நாடுகளையும் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக இணைக்கும்,” என்று தெரிவித்தார்.








