தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு உட்படாத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான பகுதிகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக ரூ.1.5 பில்லியன் பெறுமதியான தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60 மில்லியன் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் ஆபத்தான வீதிப் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று (18) உள்ளூராட்சி நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டன. இதில் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மாநகர மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் கடந்த மே 20ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு உட்படாத வீதிகளில் உள்ள பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான இடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பான குறித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜூன் 1ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்களை கண்காணிக்கும் பொறுப்பு தேசிய வீதி பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் சபை வழங்கும்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், வீதி பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடல்களால் மாத்திரம் தீர்க்க முடியாது என்றும், அதற்கான நடைமுறை வேலைத்திட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார்.
வீதி விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுடன், பாரிய பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வீதி பாதுகாப்பை போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்துவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், தேசிய முன்னுரிமையாகக் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
வீதிகளின் பாதுகாப்பற்ற உட்கட்டமைப்பு நிலைமைகளை சரிசெய்வதுடன், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளும் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆபத்தான இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன் மூலம் மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் காணப்படும் ஆபத்தான வீதிப் பகுதிகளில் விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீதி விபத்துகளை குறைப்பதுடன், வீதி பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எதிர்பார்க்கப்படுகிறது.







