கண்டி – மாத்தளை A-9 வீதியில், அக்குறணை 7ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சீமெந்து தூள் ஏற்றிய பாரவூர்தி (Bulker), சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் ஐவர் சிகிச்சை
விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவரின் நிலை ஆபத்தானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக் செயலிழந்ததால் விபத்து?
தனது வாகனத்தின் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து நேர்ந்ததாகக் கைது செய்யப்பட்ட சாரதி தெரிவித்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
முதலில் குறித்த பாரவூர்தி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளதுடன், அந்த மோட்டார் சைக்கிள் சுமார் 160 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான்கு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு டிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் எட்டு வாகனங்களுடன் குறித்த பாரவூர்தி மோதியுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றிக்கொண்டு சாரதி பயணித்துள்ளதாகவும், விபத்து இடம்பெற்றபோது அவர் மதுபோதையில் இருக்கவில்லை என்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.








