இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரியம் குறித்து பொதுமக்களிடையே அதிக புரிதலை ஏற்படுத்தும் நோக்கில், 2025 மார்ச் 15 ஆம் திகதி முதல் 31 வரை ரமழான் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்ய மேல் மாகாண சபை திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (05) மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.
மேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என ஆளுநர் ஹனீப் யூசுப் இதன்போது தெரிவித்தார்.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த விழாவை ஏற்பாடு செய்ய ரிசான் நாசீர் தலைமையிலான ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா, முஸ்லிம் சமூகங்களான Moors, Memons, Malays மற்றும் Dawood Borahs ஆகிய சமூகங்களின் உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் என்பதுடன் இது மத சகவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவவுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம், MyBiz Chamber, Overseas Reality PLC, Cinnamon Hotels and Resorts, , இலங்கை பொலிஸ்
நகர்ப்புற பாதுகாப்புப் பிரிவு (கொழும்பு), கொழும்பு நகர சபை, Roar Global, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சங்கம், Anjuman-é-Saifi Trust (Sri Lanka), இலங்கை மலே சம்மேளனம், மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மார்ச் 21 முதல் 31 வரை நகர வீதிகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கும், இந்தப் பத்து நாட்களில் ஒரு நாளில் கலாச்சார விழாவை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நாட்டில் அனைத்து மத மற்றும் கலாச்சார விழாக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர் ஹனிஃப் யூசுப் அவர்கள், மேல் மாகாணத்தில் ரமழானை முன்னிட்டு இந்த விழாவைப் போன்று, புத்தாண்டு விழா, ஈஸ்டர் விழா, வெசாக் மற்றும் பொசன் விழாக்களையும் நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கூறினார்.