இஸ்மதுல் றஹுமான்
கிளீன் ஸ்ரீலங்கா கம்பஹா மாவட்ட பிரதான நிகழ்வு நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் நேற்று 09 ம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இடம் பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, மேலதிக செயலாளர் சுகத் கித்சிறி, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி, நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரதேச செயலகம், மாநகர சபை, பொலிஸ், விமானப்படை, நீர்கொழும்பு, தழுபொத்த சிறைச்சாலைகள், தேசிய நீர் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம், றொட்டரி கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுலா ஹோட்டல் சங்கம் பிரஜைகள் பொலிஸ் குழு, சிவில் அமைப்புகள் போன்றவற்றின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி கிளீன் ஸ்ரீலங்காவின் வேலைத்திட்டத்தின் கடலோரப் பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணி கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் இன்று (நேற்று) இடம்பெறுகின்றன.
நீர்கொழும்பில் நடைபெறும் பிரதான நிகழ்வில் நீர்கொழும்பு பிரதேச செயலத்திற்கு உட்பட்ட 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கலாக 20 கிலோமீட்டர் தூர கடலோரப் பிரதேசத்தைச் துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் நீர்கொழும்பின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இன்று ஆரம்பமாகும் இந்தப் பணி ஊடாக தொடர்ந்து கடலோரப் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருந்து உல்லாசப் பயணிகளை கவரும் விதத்தில் தொடர்ந்து பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.