இலங்கையின் மிகப் பெரிய குளங்களில் ஒன்றான கலாவெவ குளம், கடும் மழை காரணமாக நீர்நிரம்பியுள்ள நிலையில் வான்கதவுகள் நேற்றிரவு (20) திறக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ மற்றும் பளளுவெவ கிராமங்களின் கிழக்குப் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் கலாவெவ குளம் பரந்து விரிந்துள்ளது.
அங்கிருந்து விடுவிக்கப்படும் நீர் அநுராதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமன்றி புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகள் வரை நீர்ப்பாசன மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கலாவெவ குளம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
அதன் காரணமாக மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் நேற்றைய தினம் குளத்தின் அவசர கால வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் கலாவெவ குளத்தில் இருந்து ஒரு செக்கனுக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் வௌியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக கலாஓயாவின் புத்தளம் வரையான இருமருங்கிலும் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.