மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கமைய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா காலநிலைமாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் பங்களிப்புடன் நேற்று (06) நடைபெற்றது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த கேட்போர் கூடம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டதுடன், ஒரே நேரத்தில் சுமார் 5000 மாணவர்கள் ஒன்று கூடக்கூடிய சகல வசதிகளுடன் இந்த புதிய கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட உள்ளது.
புதிய கேட்போர் கூட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ருவன் விஜேவர்தன, கடற்படையினரின் பங்களிப்புடன் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்களின் கல்விக்காக ரணில் விக்ரமசிங்க அன்றிலிருந்து இன்று வரை பெரும் பங்காற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய ருவன் விஜேவர்தன, ஜனாதிபதி பியகம பிரதேச மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக அடுத்த மாதம் புதிய வைத்தியசாலையை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.













