ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எதிர்வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் ஊழியர் ஒருவர் ஊடாக இரகசியத் தகவல்களைத் திருடியதாகவும், நுகர்வோர் வன்பொருள் சந்தையில் தமது நிறுவனம் நுழைவதைத் தடுக்க முயற்சிப்பதாகவும் ஆப்பிள் மீது OpenAI குற்றஞ்சாட்டியுள்ளது.
கலிபோர்னியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த எதிர்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம் OpenAI மற்றும் அதன் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது ஆப்பிள் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
தனது எதிர்காலத் தயாரிப்புத் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சாதனங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை, OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொண்டதன் மூலம் ஆப்பிள் பெற்றுக்கொண்டதாக OpenAI குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் நேரடியாகப் போட்டியிடக்கூடிய வகையில் தாம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள சாதனங்களுக்காகப் பணியாற்றுவதிலிருந்து வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களை ஆப்பிள் தடுத்ததாகவும் OpenAI தெரிவித்துள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம், OpenAI தனக்கு எதிரான ஆரம்ப வழக்கிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகவே இந்த எதிர்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையிலிருந்து நுகர்வோர் வன்பொருள் சந்தையை நோக்கியும் OpenAI தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தச் சட்டப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்புத் தலைவரான ஜொனி ஐவ் (Jony Ive) நிறுவிய வடிவமைப்பு நிறுவனமான io Products நிறுவனத்தை 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு OpenAI கையகப்படுத்தியிருந்தது.
இந் நிலையில், இரு நிறுவனங்களும் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.








