மத்திய கிழக்கில் படைகளை நிலைநிறுத்தும் எந்தவொரு நோக்கமும் தமக்கு இல்லை என தென்கொரியா தெரிவித்துள்ளதாக ஈரானியத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் சோ ஹியூன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் அண்மைய பிராந்திய நிலைமைகள் தொடர்பில் இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக சியோலில் உள்ள ஈரானியத் தூதரகம் தனது X சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் வெளிநாட்டு இராணுவப் படைகள் பிரசன்னமாவது குறித்து ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய இராணுவப் பிரசன்னம் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்வதற்குப் பதிலாக, பதற்றத்தை அதிகரித்து மோதலின் எல்லையை விரிவுபடுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தென்கொரிய வெளிவிவகார அமைச்சர், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு தென்கொரியா ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், போரில் தலையிடவோ அல்லது பங்கேற்கவோ தென்கொரியாவுக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை என்றும், மத்திய கிழக்கிற்கு இராணுவப் படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் ஈரானிய வெளிவிவகார அமைச்சரிடம் உறுதிப்படுத்தியதாக ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.







