2027ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இரண்டு முறைகளின் கீழ் மாணவர்களுக்குப் பாதணிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களைப் பயன்படுத்தி, திறந்த சந்தையில் தமக்குத் தேவையான பாதணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.
அதேவேளை, மேல், தென், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டுப் பாதணி விநியோகஸ்தர்கள் பாடசாலைகளுக்கு நேரடியாக வருகை தந்து பாதணிகளை வழங்கவுள்ளனர்.
இந் நிலையில், இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விநியோகஸ்தர்களைப் பதிவு செய்தல் மற்றும் வவுச்சர்களை ஸ்கேன் (Scanning) செய்து பரிசோதிக்கும் நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 நவம்பர் 3ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், 2026 நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை வவுச்சர்களை ஸ்கேன் செய்து பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








