இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க, தனது 58-வது பிறந்தநாளை இன்று (நவம்பர் 24) கொண்டாடுகிறார்.
1968-ஆம் ஆண்டு பிறந்த அவர், பல தசாப்தங்களாகத் தொடரும் தனது அரசியல் பயணத்தில் இலங்கை அரசியலில் பல்வேறு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆரம்பக் கல்வியை அநுராதபுரம், தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்து விளங்கினார்.
1992-ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இணைந்த அவர், 1995-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
தீவிர அரசியலில் பிரவேசம்
அரச அடக்குமுறைக் காலத்திற்குப் பின்னர் 1993-ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (JVP) மீண்டும் அரசியல் களத்தில் எழுச்சி பெற்றபோது, அநுர குமார திசாநாயக்கவும் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
1997-ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிலும் இடம்பிடித்தார்.
1998-ஆம் ஆண்டளவில் அக்கட்சியின் அரசியல் பீடத்திலும் (Politburo) இணைந்தார்.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணத்திற்கான மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டதன் மூலம் தேர்தல் அரசியலில் தனது முதல் அடியைப் பதித்தார்.
தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
பாராளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகள்
2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற அவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) அரசாங்கத்தின் கீழ் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008-ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், 2010-ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குச் சென்றார்.
2015-ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
கட்சித் தலைமைத்துவம் மற்றும் ஜனாதிபதிப் பதவி
2014 பெப்ரவரி 2-ஆம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7-வது தேசிய மாநாட்டில் அநுர குமார திசாநாயக்க அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
2019-ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
2024 செப்டம்பர் 21-ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் மூலம், தனது அரசியல் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்தார்.








