இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, ஐபிஎல் தொடரில் வீரராகத் தனது பயணத்திற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஆலோசகராக (Mentor) அவர் பொறுப்பேற்க உள்ளதாக அணியின் சமூக ஊடகப் பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ஐந்து ஐபிஎல் கிண்ணங்களை வெல்ல வழிநடத்திய புகழ்பெற்ற வீரரின் களப் பயணம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.தோனியின் புதிய பொறுப்பு மாற்றம் குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் தெரிவிக்கையில்,
“எம்.எஸ். தோனி இல்லாத சென்னை அணி இல்லை.
கடந்த இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், சறுக்கல்கள் என அனைத்தையும் கடந்து நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக வளர்ந்துள்ளோம்.
எங்களுக்கிடையிலான உறவு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான். நாங்கள் ஒருபோதும் ஒருவரின் நோக்கத்தைச் சந்தேகித்ததில்லை.
2008ஆம் ஆண்டில் தோனி சென்னை அணியில் இடம்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நான் எடுத்த முடிவுகளில் அதுவே மிகச்சிறந்த முடிவு என்பதை காலம் நிரூபித்துள்ளது.
அவர் அணிக்காகச் செய்த சாதனைகளுக்காக மட்டுமன்றி, அவர் எத்தகைய அற்புதமான மனிதர் என்பதற்காகவும் இதனைச் சொல்கிறேன்” என்றார்.
மேலும், “தோனி எப்போதும் எங்களின் அடையாளமாக இருப்பார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எப்போதும் அவருடைய இல்லமாகவே இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவிக்கையில்,
“ஒரு கிரிக்கெட் வீரராக தோனி சாதித்தவை ஒவ்வொரு ரசிகரின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன.
மஞ்சள் நிற ஜெர்சியில் அவர் களத்தில் விளையாடுவதை நாங்கள் இழப்போம் என்றாலும், தொடர்ந்து எமது வீரர்களுக்கு அவர் வழிகாட்டுவார் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.இந்தப் பந்தம் மேலும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வளர்ந்து அணியை வலுப்படுத்தும்” என்றார்.









