பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓவர் வேகத்தைப் பராமரித்த காரணத்திற்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல் 15 ஓவர்கள் பின்தங்கிய இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால், உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் 7ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி 8ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அதன் புள்ளி சதவீதம் 33.33 இலிருந்து 15.47 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை, 5 ஓவர்கள் பின்தங்கிய பாகிஸ்தான் அணிக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், 3.33 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 9ஆவது இடத்திற்கு (கடைசி இடம்) பின்தள்ளப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்திலும், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் உள்ளன.
புள்ளிகள் குறைக்கப்பட்டதுடன், ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளின்படி, குறைந்த ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி ஊதியத்தில் 5 சதவீதம் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக 50 சதவீத அபராதம் விதிக்கப்படலாம்.
அதற்கமைய, இலங்கை அணிக்கு 50 சதவீதமும், பாகிஸ்தான் அணிக்கு 25 சதவீதமும் போட்டி ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை இரு அணிகளின் தலைவர்களான பாபர் அசாம் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, முறையான விசாரணையின்றி தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








