வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உணவை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரை வகையொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் 3ஆம் தரம் முதல் 5ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மாணவர்களின் உடல்நிலை பாரதூரமானதாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







