நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண், சுவாச ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான மட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் 200ஐ விட அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்காள விரிகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவிய கொந்தளிப்பான காலநிலை காரணமாக, எல்லை தாண்டிய வளிச் சுழற்சியின் ஊடாக வளி மாசுபடுத்தும் துகள்கள் நாட்டுக்குள் நுழைந்துள்ளமையே இதற்கான பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சில பகுதிகளில் திறந்தவெளியில் பனிமூட்டத்தைப் போன்ற தோற்றத்தைக் காணக்கூடியதாக இருப்பதாகவும், உண்மையில் அவை வளிமண்டலத்தில் காணப்படும் தூசு மற்றும் ஏனைய துகள்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த நிலைமை மேலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் வளிச் சுழற்சி முறைகள் காரணமாக இதனைத் துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுத் துகள்களால் ஒவ்வாமைக்கு உள்ளாகுபவர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு ஒவ்வாமை அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், காலை வேளைகளில் இந்த நிலைமையைத் தெளிவாக அவதானிக்க முடிவதாகவும், எதிர்வரும் நாட்களில் வளி மாசுபாட்டு நிலைமை தணிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.








