2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அமனா வங்கி 1.7 பில்லியன் ரூபாய் வரிக்குப் பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
2025ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அதிகூடிய இலாபத்தைப் பதிவு செய்திருந்த அமனா வங்கி, 2026 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியிலும் தனது இலாப வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் வங்கி 2.8 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்திய இலாபத்தையும் 1.7 பில்லியன் ரூபாய் வரிக்குப் பின்னரான இலாபத்தையும் ஈட்டியுள்ளது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்பட்ட பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த ஒன்பது மாத காலப்பகுதியில் வங்கியின் நிகர நிதியளிப்பு வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதத்தால் அதிகரித்து 6.7 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. நிதியளிப்பு இலாப விகிதம் 4.3 சதவீதமாகப் பேணப்பட்டுள்ளது.
அதேவேளை, நிகர கட்டண மற்றும் தரகு வருமானம் 8 சதவீதத்தால் அதிகரித்து 1.1 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. நிகர வர்த்தக வருமானம் 42 சதவீத வளர்ச்சியுடன் 400 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளது.
இதன் மூலம் வங்கியின் மொத்த செயற்பாட்டு வருமானம் 11 சதவீதத்தால் அதிகரித்து 8.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
பணவீக்க அழுத்தங்கள் காரணமாக செயற்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வங்கியின் செலவு – வருமான விகிதம் 52 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அனைத்து வரிகளுக்கும் முந்திய செயற்பாட்டு இலாபம் 3.6 பில்லியன் ரூபாயாகும்.
மேலும், வங்கியின் மொத்த வரிப் பங்களிப்பு 2.0 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், இது அனைத்து வரிகளுக்கும் முந்திய செயற்பாட்டு இலாபத்தில் 54 சதவீதமாகும்.
இதற்கிடையில், வங்கியின் வாடிக்கையாளர் கடன் வழங்கல் 6 சதவீதத்தால் அதிகரித்து 160.4 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் சில்லறை வங்கிச் சேவைகளுக்கான நிதியளிப்பு அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வங்கியின் செயல்திறன்மிக்க இடர் முகாமைத்துவம் மற்றும் கடன் மதிப்பீட்டு நடைமுறைகள் காரணமாக, செயலிழந்த நிதியளிப்பு மற்றும் கடன்களுக்கான விகிதம் (Stage 3) 1.3 சதவீதமாகக் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் வைப்புத்தொகை 179.7 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், வங்கித் துறையில் உயர்ந்த மட்டத்திலான 43 சதவீத CASA விகிதத்தையும் வங்கி பேணியுள்ளது.
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் 213.7 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளன.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் வங்கியின் பங்கு மீதான வருமானம் (ROE) 8.6 சதவீதமாகவும், சொத்துக்கள் மீதான வருமானம் (ROA) 1.8 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று வங்கியின் ஒரு பங்கின் சந்தை விலை 26.80 ரூபாயாக இருந்ததுடன், ஒரு பங்குக்கான நிகர சொத்து மதிப்பு 48.36 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
மேலும், வங்கியின் பொதுப் பங்கு மூலதன விகிதம் (CET1) 12.2 சதவீதமாகவும், மொத்த மூலதன விகிதம் 13.6 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.
திரவத்தன்மை பாதுகாப்பு விகிதம் ரூபாய் மற்றும் அனைத்து நாணயங்களுக்கும் முறையே 298.4 சதவீதம் மற்றும் 156.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. நிகர நிலையான நிதி விகிதம் 139.4 சதவீதமாகக் காணப்படுவதுடன், இவை அனைத்தும் ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக உள்ளன.
வங்கியின் செயல்திறன் தொடர்பில் அதன் தலைவர் அஸ்கி அக்பரல்லி கருத்துத் தெரிவிக்கையில்,
“அமனா வங்கி தனது இலாபத்தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், நிதி நிலைமையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. எமது வளர்ச்சி நோக்கிலான, மக்களை மையப்படுத்திய வங்கிச் சேவை முறை, சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே இந்தச் செயல்திறன் அமைந்துள்ளது.
15 ஆண்டுகால வங்கிச் சேவையைக் கொண்டாடும் இவ்வேளையில், பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கும், தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பங்களிப்பதற்கும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில்,
“முக்கிய வருமான வழிகளில் ஏற்பட்ட வளர்ச்சி, கட்டுப்பாடான இடர் முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியவற்றின் ஊடாக அமனா வங்கி தனது இலாப வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளது.
சில்லறை வங்கிச் சேவைகள் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகள் சார்ந்த நிதியளிப்பு அதிகரித்துள்ளமை, சவால்களுக்கு மத்தியில் தொழில்களை முன்னெடுத்துச் செல்லவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் எமக்குள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
எதிர்காலத்தில் வாடிக்கையாளர் உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமனா வங்கி பிஎல்சி, இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்டு, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தனித்துவமான வங்கி நிறுவனமாகும்.
ஜித்தாவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கிக் குழுமம் (IsDB Group) இவ்வங்கியின் பிரதான பங்குதாரராக உள்ளது. 57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இக்குழுமம், சர்வதேச ரீதியில் AAA தரமதிப்பீட்டைப் பெற்ற பல்தரப்பு அபிவிருத்தி நிதி நிறுவனமாகும்.
வட்டியற்ற வங்கிச் சேவை முறையைப் பின்பற்றும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமனா வங்கி, ‘The Asian Banker’ வெளியிடும் உலகின் 50 வலுவான இஸ்லாமிய வங்கிகளின் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளராகச் செயற்படுவதைத் தவிர, அமனா வங்கிக்கு வேறு துணை நிறுவனங்களோ, இணை நிறுவனங்களோ அல்லது தொடர்புடைய நிறுவனங்களோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








