இந்தியாவுடனான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதற்கும், ஏனைய நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவுடனான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக விசேட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது குறித்தும் இலங்கை ஆராய்ந்து வருகிறது.
மேலும், பிராந்திய விரிவான பொருளாதாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (RCEP) இணைவதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் (UAE) விரிவான பொருளாதாரப் பங்காளித்துவ ஒப்பந்தங்களை (CEPA) மேற்கொள்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பிய சந்தையுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 3,430 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய நிலையான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டம் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், ஏற்றுமதிப் பொருட்களைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் ஏனைய நாடுகளுடனும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.







