கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி போலியான காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர மேயர் வ்ராய் காலி பல்தசார் (Vraie Cally Balthazaar) எச்சரித்துள்ளார்.
அண்மையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஒன் காலி பேஸ் (One Galle Face) வணிக வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகச் சித்தரிக்கும் பல AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒன் காலி பேஸ் வணிக வளாகத்திற்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி வைரலாகப் பரவிய காணொளி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒன்று என உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான Fact Crescendo Sri Lanka உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 6 மற்றும் 11ஆம் திகதிகளில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் டிக்டொக் தளங்களில் பரவிய 14 விநாடிகள் கொண்ட குறித்த காணொளியில், வணிக வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வெள்ளநீர் தேங்கியிருப்பதுடன், நகரும் படிக்கட்டுக்கு (Escalator) அருகிலும் Under Armour விற்பனை நிலையத்திற்கு அருகிலும் மக்கள் வெள்ளநீரில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த காணொளியை ஆய்வு செய்ததில், முகத் தோற்றங்களில் சிதைவுகள், இயல்பற்ற எழுத்துருக்கள் மற்றும் இயற்கைக்கு மாறான நீர் அசைவுகள் உள்ளிட்ட AI மூலம் மாற்றியமைக்கப்பட்டதற்கான பல அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக Fact Crescendo தெரிவித்துள்ளது.
மேலும், AI படங்களைக் கண்டறியும் கருவியின் ஆய்வில், காணொளியின் முதல் காட்சியிலுள்ள ஒரு சட்டகம் (Frame) AI மூலம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான 99 சதவீத சாத்தியக்கூறு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இரண்டாவது காட்சி மற்றும் அதன் ஒலிப்பதிவில் AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கான ஆதாரங்களை கூகுளின் SynthID Detector கருவி அடையாளம் கண்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, Fact Crescendo அமைப்பு ஒன் காலி பேஸ் வளாகத்திலுள்ள பல்வேறு விற்பனை நிலையங்களின் பணியாளர்களைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியுள்ளது.
இதன்போது, வணிக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகவோ அல்லது தேங்கவோ இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், வாகனத் தரிப்பிடப் பகுதியில் ஓரளவு நீர் தேங்கியிருந்ததாகவும், வைரலான காணொளியில் சித்தரிக்கப்பட்டதைப் போன்று நிலைமை மோசமாக இருக்கவில்லை என்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், கொழும்பின் பல வீதிகள் மற்றும் காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதிகளில் உண்மையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த போதிலும், ஒன் காலி பேஸ் வணிக வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததாகப் பரவும் தகவல் தவறானது என Fact Crescendo முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த நவம்பர் 6ஆம் திகதி சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழை பதிவானதைத் தொடர்ந்து கொழும்பில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
அத்துடன், நவம்பர் 11ஆம் திகதி பெய்த மழையினாலும் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








