மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12) பிற்பகல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நிலைமை
நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடல் பிரதேசங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








