நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.பி. பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவது மட்டுமன்றி, அதன் காட்சிகளைப் பதிவு செய்து காணொளித் துணுக்குகள் மற்றும் பாடல் காட்சிகளை இணையதளங்கள், சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர் தரப்பு சட்டத்தரணி விஜயன் சுப்பிரமணியம் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.பி. பாலாஜி, ‘சீன்’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கும், திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.






