இளைஞர் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் இணைத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும் பிரதி அமைச்சருமான எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒன்றியக் கூட்டத்தின்போதே இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்காவினால் தயாரிக்கப்பட்ட இளைஞர் தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவு குறித்தும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்கவினால் தயாரிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பான முன்மொழிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேலினால் தயாரிக்கப்பட்ட பெருந்தோட்ட மற்றும் பயிர்ச்செய்கைத் துறைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கான கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்புற இளைஞர் பங்கேற்புத் திட்டம் மற்றும் முன்னோடிச் செயலமர்வு தொடர்பில் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் லசித் பாஷண கமகே, தனுர திஸாநாயக்க மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய இந்த முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை இறுதி வடிவில் தயாரிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









