இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 3 முதல் 4 மணித்தியாலங்கள் வரை இடம்பெறும் இந்தக் கப்பல் சேவை, செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்குப் பயணிக்கும் ஒருவருக்கு 10 கிலோகிராம் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்குப் பயணிக்கும் ஒருவருக்கு 15 கிலோகிராம் வரையிலும் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாகப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தனியான கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.
அதன்படி, மேலதிகமாக 5 கிலோகிராம் பொருட்களுக்கு 1,000 இந்திய ரூபாயும், 10 கிலோகிராமுக்கு 1,500 இந்திய ரூபாயும், 30 கிலோகிராமுக்கு 3,750 இந்திய ரூபாயும், 60 கிலோகிராமுக்கு 7,500 இந்திய ரூபாயும் அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன், இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களின் எடையும் 30 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகாரி சிவராம் நாகப்பட்டினத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துச் சேவை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தக் கப்பல் சேவை ஊடாக இரு நாடுகளையும் சேர்ந்த 55,310 பயணிகள் ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, பண்டிகைக் காலச் சலுகையாக ‘சுபம்’ கப்பல் நிறுவனம் ஒரு வழிப் பயணக் கட்டணத்தை 6,000 இந்திய ரூபாயிலிருந்து 5,500 இந்திய ரூபாயாகக் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தில் 500 இந்திய ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொருட்களை மேலதிகக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வானிலை ஆய்வு மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களைத் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








