அப்ரா அன்சார்
கொழும்பு:ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள், உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருட்கள், சான்றிதழ் நீக்கப்படும் சூழ்நிலைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஹலால் அங்கீகார சபை (Halal Accreditation Council – HAC) விளக்கமளித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்காக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கில், HAC பிரதிநிதியும் கருத்தரங்கின் வளவாளருமான இர்பான் முபீன் (ரஹ்மானி) இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினார்.
இதன்போது, Colombo Times ஊடகவியலாளர் அப்ரா அன்சார் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ஹலால் சான்றிதழ் வழங்குதல், சான்றிதழ் நீக்குதல், மூலப்பொருட்களின் கண்காணிப்பு மற்றும் சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.
HAC நிறுவனத்தினால் சமூகத்துக்கு நன்கொடைகள் வழங்கப்படுவதில்லை!
HAC நிறுவனத்தினால் சமூகத்துக்கு எவ்வித நிதி நன்கொடைகளும் வழங்கப்படுவதில்லை என்றும், அதேபோன்று சமூகத்திடமிருந்து நன்கொடைகள் பெற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்றும் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக, 2013ஆம் ஆண்டு இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடியின் போது, ஹலால் சான்றிதழ் மூலம் கிடைத்த 800 கோடி ரூபாய் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னணியில், இவ்வாறான நிதிப் பரிமாற்றங்களைத் தவிர்க்கும் கொள்கையை HAC பின்பற்றுவதாக இர்பான் முபீன் (ரஹ்மானி) தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் நீக்கப்பட்டால் அது ஹராம் என்று அர்த்தமல்ல!
ஒரு உற்பத்திப் பொருளுக்கான ஹலால் சான்றிதழ் நீக்கப்பட்டால், அந்தப் பொருள் ஹராம் என்றோ முஸ்லிம்களின் பாவனைக்கு உகந்ததல்ல என்றோ முடிவுக்கு வர முடியாது என அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.
முதலாவது, சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் தானாக முன்வந்து ஹலால் சான்றிதழைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள விரும்பாமல் அதிலிருந்து விலகிக்கொள்வதாகும்.
இரண்டாவது, குறித்த உற்பத்திப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஹலால் தரநிலைகளுக்கு முரணான விடயங்கள் கண்டறியப்பட்டால் HAC நிறுவனத்தினால் சான்றிதழ் நீக்கப்படுவதாகும்.
ஒரு நிறுவனம் சுயமாகச் சான்றிதழிலிருந்து விலகிக்கொண்டால் அது தொடர்பான தகவல்கள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் அறிவிக்கப்படும் என்றும், HAC நிறுவனத்தினால் சான்றிதழ் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் ‘Certificate Withdrawal’ எனத் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஒரு பொருளுக்கு HAC சான்றிதழ் இல்லை என்ற தகவலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அது ஹராம் எனக் கருதுவதோ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக மட்டத்தில் பரப்புவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Bingchun, Highland தயாரிப்புகள் தொடர்பிலும் விளக்கம்
இதன்போது, Bingchun மற்றும் Highland நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழ் இல்லை எனச் சமூக மட்டத்தில் பரவி வரும் தகவல்கள் தொடர்பிலும் Colombo Times ஊடகவியலாளர் அப்ரா அன்சார் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இர்பான் முபீன் (ரஹ்மானி), ஒரு நிறுவனத்தின் சான்றிதழ் இல்லாததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
நிறுவனங்கள் சுயமாகச் சான்றிதழிலிருந்து விலகிக்கொள்ளலாம் அல்லது HAC நிறுவனத்தினால் சான்றிதழ் நீக்கப்படலாம் என்றும், நிறுவனங்கள் சான்றிதழிலிருந்து விலகுவதற்கான தனிப்பட்ட காரணங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
எனவே, குறித்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சான்றிதழ் இல்லை என்ற காரணத்தை மட்டும் வைத்து அவற்றை ஹராம் எனத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
E-Number தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
உணவுப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள E-Number ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவற்றின் மூலப்பொருட்களை அடையாளம் காணவோ, அவை ஹலாலா அல்லது ஹராமா என்பதைத் தீர்மானிக்கவோ முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு பொருளின் ஹலால் நிலை தொடர்பான சரியான தகவல்களை HAC நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்புவதற்குப் பதிலாக, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தகவல் மூலங்களைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் மூலப்பொருட்கள் மாற்றப்பட்டால் என்ன நடக்கும்?
இதன் போது இதற்குப் பதிலளித்த இர்பான் முபீன் (ரஹ்மானி), பொதுவாக இவ்வாறான மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
உதாரணமாக, ஒரு கேக் உற்பத்தி நிறுவனத்துக்கு அதன் தயாரிப்பில் பயன்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட மார்ஜரின் வகை அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அதற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மேலும் பல மாற்றுப் பொருட்களையும் HAC பரிந்துரைப்பதாக விளக்கமளித்தார்.
குறித்த மார்ஜரின் சந்தையில் கிடைக்காத சந்தர்ப்பத்தில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப் பொருட்களில் ஒன்றைத் தெரிவுசெய்து பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பொருட்கள் மாத்திரமன்றி ஏனைய உற்பத்திகளுக்கும் சான்றிதழ்
ஹலால் சான்றிதழ் என்பது உணவுப் பொருட்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதல்ல எனவும் கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.
பெயிண்ட் பிரஷ்கள், மேக்கப் பிரஷ்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் விளக்கப்பட்டது.
இவ்வாறான பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தன்மையைப் பொதுமக்களால் எளிதில் அடையாளம் காண முடியாத நிலை காணப்படுவதால், அவற்றின் மூலப்பொருட்கள் தொடர்பான சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கோழி மற்றும் இறைச்சி உற்பத்திகளுக்கான விசேட கண்காணிப்பு
ஏனைய உற்பத்திப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், கோழி மற்றும் விலங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதில் HAC விசேட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி நடவடிக்கைகளில் ஹலால் தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஆறு விசேட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், HAC நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ ஹலால் சின்னங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அவை இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் குறித்த சின்னங்களின் நம்பகத்தன்மையை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகச் சரிபார்த்துக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
HAC இலாப நோக்கமற்ற நிறுவனம்
ஹலால் அங்கீகார சபை இலாப நோக்கமற்ற நிறுவனமாகச் செயற்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் மற்றும் பங்களிப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளதாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, தற்போதைய மற்றும் கடந்தகால அரசாங்கங்களின் அரசியல் தலைவர்களின் நேரடிக் கண்காணிப்பு அல்லது கட்டுப்பாட்டின் கீழ் HAC நிறுவனத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
நிறுவனத்தின் செயற்பாடுகள், சாதனைகள் மற்றும் விருதுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு மாத்திரமானதல்ல ஹலால் சான்றிதழ்!
கடந்த காலங்களில் பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகளே அதிகளவில் காணப்பட்டதால், உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களைத் தனியாகச் சரிபார்க்க வேண்டிய தேவை குறைவாக இருந்ததாக இர்பான் முபீன் (ரஹ்மானி) சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவுகளைத் தாண்டி பொதி செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹலால் சான்றிதழ் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஒன்றல்ல என்றும், ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் தரமான உணவுப் பயன்பாட்டுடன் தொடர்புடையது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
ஹலால் உணவு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் ஏனைய மத சமூகத்தினரும் தற்போது புரிதலை வளர்த்துக்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஹலால் துறை தொடர்பான விழிப்புணர்வையும் தெளிவுபடுத்தல்களையும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமன்றி ஏனைய மத சமூகத்தினருக்கும் வழங்கும் நோக்கில் HAC நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் தொடர்வதுடன், மேலும் பல கருத்தரங்குகள் மற்றும் பயனுள்ள நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.









