அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த செனட் சபையின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில், சற்றுமுன்னர் வரை வெளியாகியுள்ள அமெரிக்க பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, செனட் சபையில் ஜனநாயகக் கட்சி 51 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி இதுவரை 39 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அயோவா (Iowa) மாநிலத்தில் பெற்ற எதிர்பாராத வெற்றியின் மூலம் செனட் சபையின் மீதான தனது கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.கென்சாஸ் (Kansas), டெக்சாஸ் (Texas) மற்றும் தெற்கு கரோலினா (South Carolina) உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் பாரம்பரிய ஆதிக்கம் மிக்க மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் செனட் சபையில் ஜனநாயகக் கட்சி மேலும் ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மிச்சிகன் (Michigan) மற்றும் மினசோட்டா (Minnesota) ஆகிய மாநிலங்களில் தக்கவைத்துக்கொள்ளப் போராடிய இரண்டு ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சியினர் இழந்த போதிலும், செனட் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளனர்.
டெக்சாஸில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகக் கட்சியினர் மாநில அளவிலான எந்தவொரு பதவியையும் வென்றிராத நிலையில், ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் கென் பாக்ஸனை (Ken Paxton), ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தாலாரிகோ (James Talarico) தோற்கடித்துள்ளார்.
தெற்கு கரோலினாவில், இந்த ஆண்டு காலமான லின்சே கிரஹாமின் (Lindsey Graham) இடத்திற்காக ட்ரம்ப்பால் ஆதரிக்கப்பட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டார்லின் கிரஹாமை (Darline Graham), ஜனநாயகக் கட்சியின் அன்னி ஆண்ட்ரூஸ் (Annie Andrews) தோற்கடித்துள்ளார்.
அதேவேளை, ஒஹியோ (Ohio) மாநிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) வகித்த செனட் ஆசனத்தை ஜனநாயகக் கட்சியின் ஷெரோட் பிரவுன் (Sherrod Brown) கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றிகள் ஜனநாயகக் கட்சியினர் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தெற்கு கரோலினாவில் 18 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும், கென்சாஸில் 16 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி இதுவரை 184 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி 110 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் மொத்தமுள்ள 435 ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு 218 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.








