மலையக புகையிரதப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில், 162/54 மைல் கல் பகுதிக்கு அருகில் இன்று (04) அதிகாலை பாரிய மண் மேடும் கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.
இதனால் குறித்த புகையிரதப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.புகையிரதப் பாதையில் சரிந்து விழுந்துள்ள மண் மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் தேவைப்படும் என நானுஓயா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ புகையிரதம் இன்று பண்டாரவளை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புகையிரதப் பாதை வழமைக்குத் திரும்பும் வரை பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணிக்கும் அனைத்து புகையிரத சேவைகளும் இன்று இடம்பெறாது எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.








