ரம்புக்கனை மற்றும் பேராதனை – கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (25) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரம்புக்கனைக்கும் பேராதனைக்கும் இடையிலுள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சீரற்ற காலநிலை காரணமாக மண் மற்றும் சேறு ரயில் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து, ரயில் பாதையை விரைவாகச் சீரமைக்கும் நோக்கில் நேற்று (24) மற்றும் இன்று அவசர திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் நிறைவடைந்து, ரயில் பாதை பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்படும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தைச் செலுத்திய பயணிகள், எந்தவொரு ரயில் நிலையத்திலும் முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







